Tuesday, December 21, 2010

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை - TPV5

இது ஒரு மீள்பதிவு, சென்ற வருடம் எழுத விட்டுப் போன பாசுர விளக்கங்களை இந்த வருடம் எழுதி திருப்பாவை முப்பதை பூர்த்தி செய்யலாம் என்று உத்தேசம் இருக்கிறது, பார்க்கலாம் !
*******************************************

திருப்பாவையின் ஐந்தாவது பாசுரமான

மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்*

தூய பெரு நீர் யமுனைத் துறைவனை*

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்*

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்*

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது*

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்*

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்*

தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

என்ற பாடல் மிக்க பொருட் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும் !


நேரடிப் பொருள்:
உணர்வதற்கரிய அதிசய குணங்களை உடையவனும், அதிசயமான காரியங்களை நிகழ்த்துபவனும், வட மதுரா தேசத்து மாந்தர்க்கு அரசனும், ரட்சகனும், பரிசுத்தமான மகாநதியான யமுனைத் துறையில் வசிப்பவனும், இடையவர் குலத்தில் அணையாப் புண்ணியச் சுடர் போல் அவதரித்தவனும், தனது அன்னையின் கருப்பையை ஒளி மிக்கதாக்கி, அவளது திருவயிற்றை விளங்கச் செய்து அவளுக்குக் குன்றாப் புகழ் சேர்த்தவனும் ஆன தாமோதரன் என்ற கண்ணபிரானை

தூய்மையான உடல் உள்ளத்துடன் வந்து, அவன் திருவடிகளில் தூய மலர்களைத் தூவி வணங்கி, வாயினால் அவனது கல்யாண குணங்களைப் போற்றிப் பாடி, சிந்தையில் அவனை மட்டுமே நிறுத்தி நாம் தியானித்தோமானால், நாம் அறிந்து முன் செய்த பாவங்களும், அறியாமல் செய்யவிருக்கும் பாவங்களும், நெருப்பில் இட்ட தூசு போல தடயமின்றி அழிந்து போய் விடும் ! ஆகவே அம்மாயப்பிரானின் திருநாமங்களை விடாமல் சொல்லி, பாவை நோன்பிருப்போம், வாருங்கள் !


பாசுர விசேஷம்:
இப்பாசுரத்தில் உபாயம் (அடையும் வழி), உபேயம் (அடைய வேண்டும் பொருள்), புருஷார்த்தம் ஆகிய மூன்றும் சொல்லப்பட்டுள்ளன.

உபாயம்: தூமலர் தூவித் தொழுதல், வாயினால் பாடுதல், மனத்தினால் சிந்தித்தல்

உபேயம்: மாயன், மன்னு வடமதுரை மைந்தன், தூயபெருநீர் யமுனைத் துறைவன், ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு, தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரன்

புருஷார்த்தம்: போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்


'மாயன்' லீலாவிபூதி நாதனையும், 'மன்னு' பரத்துவ மூர்த்தியான வாசுதேவனையும், 'வடமதுரை மைந்தன்' பரமபதநாதனையும் குறிப்பதாக உள்ளுரைப் பொருளாம். அது போல, யமுனைத் துறைவன் என்பது வைகுண்டத்தில் பாயும் விராஜ நதிக்கரையில் எழுந்தருளியவன் என்ற உள்ளர்த்தமாம்.

இன்னொரு வகையில், யமுனை நதி சம்சார பந்தத்தின் உருவகமாம். அதைக் கடந்து அக்கரையான மோட்ச சித்தியை அடைய, அடியவரை ஏற்றிச் செல்லும் படகுத் தலைவனாக (துறைவன்) கண்ணனே துணையாக வருகிறான் என்பது உள்ளர்த்தமாம்!

தாமோதரன் = தாம(கயிற்றால்)+உதரன்(இடுப்பில் கட்டப்பட்டவன்); யசோதா பிராட்டி கண்ணனின் குறும்பை சமாளிக்க அவன் இடுப்பை கயிற்றால் உரலோடு சேர்த்து கட்டியதால், கண்ணபிரான் வயிற்றில் நிரந்தர தழும்பு நிலவியது! உலக மாந்தரின் கர்ம பலன்களாகிய கயிற்றை அறுத்து அவர்களை விடுவித்து தடுத்தாட்கொள்ளும் பரமனே, தன் பூவுலகத் தாயின் கயிற்றுக் கட்டலை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டான் என்பதே நயமான நகைமுரண் தானோ! அதே சமயம், கண்ணன் தன் வாயைத் திறந்து ஏழுலகங்களை யசோதாவுக்குக் காட்டியபின், அவள் தான் அம்மாயக் கண்ணனின் கட்டுக்குள் இருந்தாள் என்று சொல்வதும் பொருத்தமானதே :)
Photobucket - Video and Image Hosting
தூயோமாய் வந்து - பரிசுத்தமான வாக்கு, மனம் மற்றும் உடலோடு பரமனை அணுகுதல்

தூமலர் தூவித் தொழுது - இங்கு மலர் என்பது அடியவரின் உள்ளத்திலிருந்து ஆத்மார்த்தமாக மலரும் எட்டுவகை குணநலன்களை குறிப்பில் உணர்த்துகிறதாம்!

1. அகிம்சை
2. புலனடக்கம்
3. எல்லா உயிர்களிடத்திலும் நேசம்
4. சகிப்புத்தன்மை, பொறுமை, சமத்துவம்
5. ஞானம்
6. தியானம்
7. ஆன்மீக தவம்
8. சத்தியம்

எளிமையாகச் சொல்லவேண்டுமானால், பரமனைப் பற்ற, பெரிய அளவில் கர்ம, ஞான, பக்தி யோகங்கள் எல்லாம் அவசியமில்லை என்கிறாள் ஆண்டாள்! கடைபிடிக்க வேண்டியதெல்லாம், அப்பரமனை மலர் தூவி வணங்கி, போற்றிப் பாடி, முடிந்த பொழுதெல்லாம் அவனை சிந்தித்த வண்ணமிருத்தலே! இந்த ப்ரபத்தி மார்க்கமே மோட்ச சித்தியை அருளவல்லது என்பதே இப்பாசுரத்தின் சாரம்.

சில குறிப்புகள்:
1. கண்ணன் இப்பூமியில் அவதரித்த இடம் என்ற காரணத்தினாலேயே, "மன்னு" வடமதுரை என்று போற்றப்பட்டுள்ளது !

2. யமுனை நதியை "தூயப்பெருநீர்" என்று பாடியதற்கு, வசுதேவர் குழந்தைக் கண்ணனை ஆயர்பாடிக்கு எடுத்து சென்றபோது, அந்த நதி விலகி வழி விட்டதைக் காரணமாகப் பெரியோர் கூறுவர்.

சீதையை ராவணன் கவர்ந்து சென்ற விஷயத்தை (ராவணனுக்கு அஞ்சி) ராமபிரானிடம் சொல்லாமல் மௌனியாக இருந்த கோதாவரி போல் அல்லாமல், யமுனை கம்சனுக்கு பயப்படாமல், தர்மத்தின் பக்கம் நின்றாள். அதோடு, கண்ணன் கோகுலத்தில் இருந்த காலத்தில், யமுனையில் தான் கொப்பளித்தான், குளித்தான், விளையாடினான். அதனாலும், யமுனை தூயப் பெருநீர் ஆயிற்று! அந்த மாயன் கோபியரோடு நடத்திய லீலைகளுக்கெல்லாம் யமுனையே சாட்சி, இல்லையா :)
Photobucket - Video and Image Hosting

3. மேலும், கவிஞர்க்கு பாடப்படும் நாயகனின் முக்கிய அடையாளங்கள் அவசியம் என்பதால், வடமதுரை என்ற ஊரும், தாமோதரன் (கயிற்றினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன்!) என்ற பெயரும், யமுனை என்ற ஆறும் பாசுரத்தில் இடம் பெற்றன !

4. அதே போல், "தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க" என்று ஆண்டாள் நாச்சியார் பாடும்போது, உடல், வாக்கு, சிந்தனை என்ற மூன்றின் செயல்களும், இறைவனைச் சென்றடைய, ஒரு சேர நடைபெற வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படுகிறது !

5. உலகத்தார் எல்லாரும் கொண்டாடுகின்ற புகழ் யசோதைக்கு ஏற்படும்படி செய்ததால், "தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரன்" என்று மாயக் கண்ணன் போற்றப்படுகிறான்.

6. "போய பிழை" என்பது கண்ணனை அடைவதற்கு முன், அறிந்து (புத்தி பூர்வமாக) செய்த பாவங்களைக் குறிக்கிறது. "புகுதருவான் நின்றன" என்பது, கண்ணனைச் சேர்ந்த பின், அறியாமல் (அபுத்தி காரணமாக மட்டுமே!) செய்ய நேரும் பாவங்களைக் குறிக்கின்றது.


சரணாகதிக்குப் பின் பாவம் செய்ய முடியுமா? "முடியவே முடியாது" என்று கூறும் அடியவர் இதை வேறு விதமாக பார்க்கின்றனர்! "புகுதருவான் நின்றன" என்பதை (நம்மை பரமனிடம் அண்டவிடாமல் செய்கின்ற) நமது புண்ணிய (நல்வினைப்) பயனாகவே கொள்ள வேண்டும். சில நேரங்களில், நல்வினைப்பயன் கூட மோட்ச சித்திக்கு எதிராக இருக்க வல்லது. ஆக, அவன் பேரைப் பாடி, தூய வழிபாடு செய்தால், பாவ புண்ணிய பலன்களை மீறி (தீயினில் தூசாகும்!) பரமனைப் பற்ற முடியும்!

7. ஐந்து இறை நிலைகளில், முதல் பாசுரத்தில் பரம்பொருளையும் (நாராயணன்), 2வதில் பாற்கடலில் பள்ளி கொண்ட வியூகப் பெருமாளையும் (பையத்துயின்ற பரமன்), 3வதில் விபவ மூர்த்தியான த்ரிவிக்ரமனையும் (ஓங்கி உலகளந்த உத்தமன்), 4வதில் அந்தர்யாமியாக எங்கும் வியாபித்திருக்கும் ஊழி முதல்வனையும் கொண்டாடிய சூடிக் கொடுத்த நாச்சியார் இப்பாசுரத்தில் கோயில்களில் எழுந்தருளியிருக்கும் பெருமாளின் அர்ச்சாவதர கோலத்தை (வடமதுரை மைந்தன் என்று உருவகம்) பாடுகிறார்! ஆக, ஆண்டாள் வரிசைக் கிரமமாக பரந்தாமனின் பர, வியூஹ, விபவ, அந்தர்யாமி, அர்ச்ச நிலைகளை முதல் 5 பாசுரங்களில் பாடியிருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.

8. பெருமழையும் புயல் காற்றும் அலைக்கழித்த ஓர் மகா இருட்டு இரவில் ஆயர்பாடி வந்து சேர்ந்தவன் "ஆயர் குலத்தில் தோன்றும் அணிவிளக்காக" பிரகாசித்தான்! இந்த வரியில் "தோன்றும்" (தோன்றிய என்றிருக்க வேண்டும்) என்ற சொல்லில் இருக்கும் கால மயக்கம், ஆண்டாள் வேண்டுமென்றே செய்த தவறு என்று தான் கொள்ள வேண்டும்!

You Tube-ல் இப்பாசுரத்தை கேட்க சொடுக்கவும்

என்றென்றும் அன்புடன்
பாலா

### 272 ###

21 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test comment !

குமரன் (Kumaran) said...

Comment to tell you I saw this post. :-)

I have not read it yet. I will come back, read and leave a comment. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அருமையான விளக்கங்கள் பாலா!

//யமுனை நதியை "தூயப்பெருநீர்" என்று பாடியதற்கு, வசுதேவர் குழந்தைக் கண்ணனை ஆயர்பாடிக்கு எடுத்து சென்றபோது, அந்த நதி விலகி வழி விட்டதைக் காரணமாகப் பெரியோர் கூறுவர்.//

உண்மை!
இதே போல் கோதாவரியை இராமாயணத்தில் புகழாததற்குக் காரணம், இராமன் சீதையைக் கண்டீர்களா என்று கேட்ட பின்னும் வாய் திறக்கவில்லை; அதனால் தான் என்று நயமாகச் சொல்லுவர்!

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு என்பதில் "தோன்றும்" என்பதையும் கவனிக்கவும்! "பிறக்கும்" என்று சொல்லவில்லை! அத்தனை நயம் கோதையின் திருப்பாட்டில்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்*//

தாமோதரன் =
தாம+உதரன்=கயிறு+வயிறு
இன்றும் திருவரங்கத்தில் மூலவரின் திரு வயிற்றுப் பகுதியில் தாம்புக் கயிறால் கட்டப்பட்ட தழும்புகள் மூன்று இருக்கும்!

மூலவர் ரங்கநாதன் கண்ணனாகவும் உற்சவர் நம்பெருமாள், ராமனாகவும் கருதப்படுகின்றனர்!

படங்களும் அருமை பாலா!

ச.சங்கர் said...

பாலா,

கலக்குறியே கண்ணு...

அப்பாலிக்கா

போய.....புகுதருவான்.....நின்றன

அப்டீன்ன

செய்த...செய்யப்போகும்...செய்யும்

past..future...present

அப்படீன்னு எங்கேயோ கேட்ட ஞாபகம் :) கரீக்குட்டா ?

வல்லிசிம்ஹன் said...

எ.அ.பாலா,
கிட்டத்தட்ட ஒரு உபன்யாசம் கேட்ட உணர்வு.
உங்கள் பதிவும் ,கூடவே வரும் பின்னூட்டங்களும்.
தமிழ்மண திருப்பாவை என்னைச்
சென்னையில் விடுகிறது.
நன்றி.

குமரன் (Kumaran) said...

நல்ல விளக்கங்கள் பாலா.

enRenRum-anbudan.BALA said...

கண்ணபிரான்,
வருகைக்கு நன்றி.
//ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு என்பதில் "தோன்றும்" என்பதையும் கவனிக்கவும்! "பிறக்கும்" என்று சொல்லவில்லை! அத்தனை நயம் கோதையின் திருப்பாட்டில்!
//
மிகச் சரியாகச் சொன்னீர்கள் !
//மூலவர் ரங்கநாதன் கண்ணனாகவும் உற்சவர் நம்பெருமாள், ராமனாகவும் கருதப்படுகின்றனர்!
//
தகவலுக்கு நன்றி !

சங்கர், வல்லிசிம்ஹன்,குமரன்,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி !

Sud Gopal said...

டாப் க்ளாஸ் பாலா...
படங்களும் அருமையாகப் பிடித்துள்ளீர்கள்...

"தீயினில் தூசாகும்" - அற்புதமான வரிகள்.

கூடாரவல்லிக்கு மூடநெய் பெய்து முழங்கை வழிவார சக்கரைப் பொங்கல் அனுப்பினா உங்களுக்கு புண்ணியமாகப் போகும்.

enRenRum-anbudan.BALA said...

Test comment !

உயிரோடை said...

அருமையான பதிவு. யமுனையை "தூய பெரு நீர்" என்றதற்கு விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி.
உபாயம் (அடையும் வழி), உபேயம் (அடைய வேண்டும் பொருள்), புருஷார்த்தம் சுட்டி காட்டியது அருமை

போய பிழை,தீயால் தூசாகும் விளங்கள் அருமையோ அருமை

நன்றி நம்பெருமாளுக்கு

enRenRum-anbudan.BALA said...

//
நன்றி நம்பெருமாளுக்கு
//
நன்றி மின்னலுக்கு,

வரவுக்கும் கருத்துக்கும் :)

enRenRum-anbudan.BALA said...
This comment has been removed by the author.
enRenRum-anbudan.BALA said...

I have added more information and pictures to this post and republished!

ISR Selvakumar said...

FM கேட்பது போல போகிற போக்கில் படித்துவிடலாம் என்று ஆரம்பித்தேன். வரிக்கு வரி படிக்க வைத்துவிட்டீர்கள்.

Mahadevan said...

hare krishna..thanks a lot prabhuji

Shukran said...

Fantastic ...

Shukran said...

Fantastic explanation

Shukran said...

Fantastic explanation

Sankaran Scientist said...

சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியை வீரர் கண்டார் என்று கம்பராமாயணத்தில் உள்ளது. சான்றோர் ஆழ்ந்த புலமையைப் போல அத்துனை ஆழமானது என்று பாடியுள்ளார் கம்பர். கவனியுங்கள்.

rayan s said...

மன்னு வடமதுரை...மைந்தனால் என்றும் நிலைபெற்றிருக்கும் பேறுபெற்ற வடமதுரை...மன்னுதல்..நிலைபெற்றிருத்தல்.‌‌
ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு - குறள்..

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails